கோவையில் அகில இந்திய பருத்தி மாநாடு வரும் ஆகஸ்ட் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
கோவையை தலைமையாக கொண்டு செயல்படும் இந்தியன் காட்டன் பெடரேஷன் (ICF) மற்றும் பஞ்சாப்பை தலைமையாக கொண்டு இயங்கும் இந்தியன் காட்டன் அசோசியேஷன் லிமிடெட் (ICAL) ஆகிய அமைப்புகள் இணைந்து 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் அகில இந்திய பருத்தி மாநாட்டின் 6 ஆவது பதிப்பை நடத்தவுள்ளனர்.
‘பருத்தி – எதிர்காலத்துக்கான நிலையான நூற்பொருள்’ எனும் கருவில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இத்துடன் உலக அரங்கில் பருத்தியின் நிலை மற்றும் பருத்தி சார்ந்த தொழில்துறைக்கு உள்ள சவால்கள் குறித்தும் இந்நிகழ்வில் விவாதிக்கப்படவுள்ளது.
மொத்தம் 7 அமர்வுகளில் வெவ்வேறு முக்கிய தலைப்புகளில் தொழில்துறை வல்லுநர்கள், பல்வேறு பருத்தி சார்ந்த சங்கங்கள்/அமைப்புகளின் முக்கிய உறுப்பினர்கள், ஆராய்ச்சி நிறுவனங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசவுள்ளனர். சுமார் 400க்கும் மேற்பட்ட பருத்தி துறை சார்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கபார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வு மூலமாக இந்த துறைக்கு மாநில, மத்திய அரசுகளிடம் இருந்து தேவைப்படும் உதவிகளை குறித்தும் விவாதிக்க உள்ளனர்.
இந்த 2 நாள் நிகழ்வின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் ஜவுளி ஆணையர் ரூப் ராஷி, கவுரவ விருந்தினராக மத்திய பிரதேச அரசின் வேளாண் துறை செயலாளர் செல்வேந்திரன் பங்கேற்க உள்ளனர்.
மேலும், பருத்தியின் வளர்ச்சிக்கும், சமுதாயம் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய ஆளுமைகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், பிஸ்னஸ் லீடர் விருதும் வழங்கப்படவுள்ளது.
கே.ஜி. குழுமத்தின் தலைவர் கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், எல்.எஸ். மில்ஸ் நிறுவனத்தின் தலைவர் மணிவண்ணன் அவர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ஆர்.எஸ். ஆஷர்நிறுவனத்தின் பார்ட்னர் அதுல் ஆஷர்; டாம்ஜி வேல்ஜி & கோ நிறுவனத்தின் பார்ட்னர் அசோக் தாகா மற்றும் கோபால் புராடிய ஆகியோர்க்கு பிஸ்னஸ் லீடர் விருது வழங்கப்படவுள்ளது.