கடந்த சில மாதங்களாக தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் வெள்ளியும் எட்டாக்கனியாகி விடுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ வெள்ளி சுமார் ரூ.80,000 என்ற அளவில் இருந்த நிலையில், தற்போது ரூ.2,74,000 வரை உயர்ந்துள்ளது.

உலகளாவிய பொருளாதார நிலைமை, பணவீக்கம் மற்றும் எதிர்கால நிதி நெருக்கடிகளை சமாளிக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வெள்ளியை வாங்கி வருகிறது.  தற்போது டன் கணக்கில் வெள்ளியை இந்தியா இறக்குமதி செய்து வருவது முக்கியத்துவமாக மாறியுள்ளது.

குளோபல் டீஃப் ரிசெர்ச் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, கடந்த ஆண்டில் உலக அளவில் அதிக அளவு வெள்ளியை இறக்குமதி செய்த நாடுகளில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா ரூ.82,800 கோடி மதிப்பிலான வெள்ளியை வாங்கியுள்ளது. இது 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 44 சதவீதம் அதிகம் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி பாதுகாப்பான முதலீடு என்ற காரணத்தினால் மட்டும் வெள்ளியின் விலை உயரவில்லை. தொழில்துறையில் வெள்ளி முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்கள், உயர் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில் வெள்ளியின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் வெள்ளிக்கான தேவை உயர்ந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலகளவில் வெள்ளி சுத்திகரிப்பில் சீனா முன்னணியில் உள்ளது. இந்நிலையில், வெள்ளி ஏற்றுமதிக்கு சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்திருப்பது சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வெள்ளிக்கான தேவை அதிகமாக உள்ள நிலையில், சுரங்க உற்பத்தி மந்தமாக இருப்பதால், ஆண்டுதோறும் 20 முதல் 25 கோடி அவுன்ஸ் வரை வெள்ளி பற்றாக்குறை நிலவுகிறது என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. (ஒரு அவுன்ஸ் = 28.35 கிராம்).

இந்த நிலை தொடர்ந்தால், 2026 ஆம் ஆண்டில் வெள்ளியின் விலை கடந்த ஆண்டுகளை விட பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர். இதன் காரணமாக, வருங்காலத்தில் வெள்ளி மிகச் சிறந்த முதலீட்டு வாய்ப்பாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வெள்ளியை அதிக அளவில் வாங்குவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று சோலார் பேனல் உற்பத்தி ஆகும். சூரிய ஆற்றல் துறையில் 2030-க்குள் உலகின் முன்னணி நாடாக மாற இந்தியா திட்டமிட்டுள்ளதால், அதற்குத் தேவையான சோலார் பேனல்கள் தயாரிப்பில் வெள்ளி இன்றியமையாத மூலப்பொருளாக உள்ளது.

அதேபோல், மொபைல் போன்கள், கணினிகள், 5ஜி சாதனங்கள் மற்றும் மின்சார வாகனங்களில் வெள்ளி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் வெள்ளி உற்பத்தி மிகக் குறைவாக இருப்பதும், இறக்குமதி அதிகரிக்க ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.