கௌமார மடாலயத்தின் முப்பெரும் விழா வரும் ஜனவரி 5, 6ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து கோவை சின்னவேடம்பட்டி சிரவணபுரம் கௌமார மடாலயத்தின் நான்காவது குருபீடம் ராமானந்த குமர குருபர சுவாமிகள் கூறியதாவது:
கௌமார மடாலயம் கடந்த 135 ஆண்டுகளுக்கு முன் இராமானந்த சுவாமிகளால் நிறுவப்பட்டது. சுவாமிகளின் 69வது ஆண்டு குருபூஜை நிறைவு விழா, நூல்கள் வெளியீட்டு விழா, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள், குரு மகாசந்நிதானங்களின் ரத ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் வரும் 5, 6ம் தேதிகளில் இரண்டு நாட்கள் நடக்கிறது.
முதல் நாள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திருப்புகழ் இன்னிசை, சொற்பொழிவு நிகழ்ச்சி, பக்தி இன்னிசை நிகழ்ச்சி, மேஜிக் ஷோ, நாட்டிய நாடகம், பெருஞ் சலங்கை ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
2ம் நாள் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரை வேள்வி, பெருந்திருமஞ்சனம், பேரொளி வழிபாடு, அடியார்தமை அமுது செய்விக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. வளாக கலையரங்கில் பிற்பகல் 2 மணிக்கு தவத்திரு குமரகுருபர சுவாமிகள் தலைமையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது.
விழாவில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் குழந்தைவேல் உட்பட பலருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. விழாவில் பேரூராதீனம் தவத்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான ஆன்மீக பெரியோர்கள் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
