ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு, சென்னையில் ஆதியோகி ரத யாத்திரை வரும் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்திப் பேரவையின் அடியார்கள் கோபால், பாலாஜி மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா பிப்ரவரி 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் தங்களது ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும், இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் பயணிக்கும் ஆதியோகி ரதங்களை ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து ஆதியோகி ரதம் புத்தாண்டு தினத்தில் சென்னை தாம்பரத்தை வந்தடைந்தது. சென்னையில் ஆதியோகி ரத யாத்திரை வரும் 8-ஆம் தேதி வரை பயணிக்க உள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக இந்த ரத யாத்திரை நடைபெற உள்ளது.
இதற்கு அடுத்ததாக ரதம் திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளுக்கு செல்ல உள்ளது. அதேபோன்று வடக்கு மண்டலத்தில் உள்ள இதர பாடல் பெற்ற தலங்களான திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோயில், அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில் மற்றும் பாண்டிச்சேரி அருகே உள்ள இரும்பை மகாகாளேஸ்வரர் கோயில்கள் வழியாகவும் ரதம் பயணிக்கும் என தெரிவித்தனர்.
