அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாக விளங்கும் பராசக்தி, பல்வேறு பெயர்களுடன் பல்வேறு தலங்களில் குடிகொண்டு காட்சியளிக்கிறாள். அந்த வகையில், சத்தியமங்கலத்தில் எழுந்தருளியுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் திருத்தலத்தை அடிப்படையாகக் கொண்டு, கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் மிகவும் பேராற்றலுடன் எழுந்தருளி உள்ள அருள்மிகு பண்ணாரி அம்மன் திருக்கோவிலின் சிறப்புகள் பற்றி இங்கே காணலாம்.

தல வரலாறு

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலமான 1870 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் அதிகாரிகள் கர்நாடகாவில் உள்ள கொள்ளேகாலில் இருந்து கேரளா செல்வதற்கு சத்தி – கோயம்புத்தூர் வழியாக குதிரை வண்டியில் பயணம் செய்வர். அக்குதிரைகளை மீண்டும் அதே இடத்திற்கு கலால் போலீஸார்கள் கொண்டு சேர்ப்பர். இந்த சூழலில், ஆவாரம்பாளையம் பகுதிகளில் வசித்து வந்த கம்மகுல மக்கள் பலர் கலால் போலீஸ் வேலை செய்து வந்தனர்

அவர்களில் ஒருவரான முன்னோர் சத்தி பண்ணாரி அம்மனை வழிபட்டு வந்தார். அப்போது, அவரின் கனவில் ஓர் அசரீரி தோன்றியது. அதாவது, ‘அம்மனை வழிபட்டு ஊருக்குத் திரும்பும் வழியில் பவானி ஆற்றில் குளித்துவிட்டு கண்ணிற்கு தென்படும் லிங்கங்களை எடுத்து ஆவாரம்பாளையம் பகுதியில் வேப்பமரம் அடியில்  வைத்து பூஜை செய்ய வேண்டும்’ எனும் திருவாக்கைப் பெற்றார்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர், லிங்கங்கள் இருந்த அவ்விடத்தில் பெரிய மேடையைக் கட்டினர். பின்னர் 1938 ஆம் ஆண்டு அங்கு ஒரு சிறிய கோவிலைக் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி வழிபட்டு வந்தனர். 1949 ஆண்டில் அம்மன் அருள்வாக்கின்படி குண்டம் அமைத்து வழிபட்டு, திருக்கோவிலைப் பெரிதளவில் உயர்த்தினர்.

இந்த வகையில் 154 ஆண்டுகள் பழமையான இத்திருக்கோவில் மிக சக்தி வாய்ந்த தலமாக அமைகிறது.

சிறப்பு வழிபாடுகள்:

பண்ணாரியில் இருந்து லிங்கங்களை எடுத்து வந்து, அந்த அம்மனின் சக்தியாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட தலமாக இருப்பதால், அங்கு நடைபெறும் பூஜைகள் மற்றும் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி இங்கும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

வடக்கு திசை நோக்கி அருள்பாலித்து வரும் பண்ணாரி அம்மனுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரமும், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளில் விஷேச பூஜைகளும் நடைபெறும்.

வேண்டுதல்கள்

கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், அம்மை நோய் பாதிப்பு உள்ளவர்கள், குழந்தை வரம் வேண்டுவோர் வழிபடக்கூடிய முக்கிய ஆலயமாக பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. மேலும், திருமண பாக்கியம் கைகூடாதவர்கள், கை-கால் உறுப்பு குறைபாடு உள்ளவர்கள், மன அமைதியைத் தேடுவோர் மற்றும் சகல செல்வ சௌபாக்கியங்களுக்கும்  இவ்வாலய அம்மனை மனம் உருக வேண்டிக்கொண்டால் பிரார்த்தனைகள்  கைகூடும்.

உப்பு வழிபாடு

அம்மன் கோவில்களில் மிளகு மற்றும் உப்பு வாங்கி காணிக்கையாக செலுத்துவது  பக்தர்களின் ஐதீகம். அந்த வகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காகவும், வேண்டுதல் நிறைவேறிய பின்பும் கொடி மரத்திற்கு முன்பிருக்கும் வேலில், மிளகு மற்றும்  உப்பு செலுத்தும் வழிபாட்டைத்  தொடர்ந்து செய்து வருகின்றனர்.

குண்டம் பெருந்திருவிழா

குண்டம் திருவிழா காலங்களில் திருக்கொடியேற்றம், திருப்பூச்சாட்டு, கரகங்களோடு சக்தி அழைக்கும் நிகழ்வு 75 ஆண்டுகளாக இக்கோவிலின் மிகப்பெரிய விஷேசமாகக் காணப்படுகிறது. அந்நாளில் திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவர்.

குறிப்பாக, குண்டம் திருவிழாவின்போது பக்தர்கள் நேர்த்திக்கடனாக  கண்ணடக்கம் மற்றும் உருவத் தகடுகள் கை, கால், கண் போன்றவற்றைச் செய்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செய்து வருகின்றனர்.

அம்மனின் பேரருளால் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் குண்டம் திருவிழா மிக சிறப்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தரிசன நேரம்:

காலை 6 முதல் 12:30 மணி வரையிலும், மாலை 5 முதல் 8 மணி வரையிலும் பண்ணாரி அம்மனை தரிசித்து அருள் பெறலாம். தொடர்புக்கு: +91 6381 784 680.