கோவை கொடிசியா வளாகத்தில் நவம்பர் 19 அன்று (புதன்கிழமை) நடைபெறும் இயற்கை விவசாயிகள்  மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக விமானம் மூலம் கோவை வரும் அவர், மாநாட்டில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்புகிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் வரும் புதன்கிழமை பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

செய்திக்குறிப்பில் கூறியிருப்பது,

சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து கோவை மாநகருக்கு வரும் பேருந்துகள், கனரக வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து விமான நிலையம் வழியாக வர தடை செய்யப்படுகிறது. மாறாக நீலாம்பூரில் இருந்து எல் அண்டு டி பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர் வழியாக வரலாம்.

கோவையில் இருந்து அவினாசி சாலை வழியாக வெளியே செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் லட்சுமி மில் சந்திப்பில் யூ-டர்ன் செய்து புலியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் வழியாக எல் அண்டு டி பைபாஸ் அடைந்து செல்லலாம்.

நீலாம்பூரில் இருந்து கோவைக்குள் வரும் இலகுரக வாகனங்கள் தொட்டிப்பாளையம் பிரிவில் வலதுபுறம் திரும்பி தொட்டிப்பாளையம், கைகோளப்பாளையம், காளப்பட்டி நால் ரோடு, விளாங்குறிச்சி வழியாக வரலாம்.

கோவையில் இருந்து அவினாசி சாலை வழியாக செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள் அவினாசி சாலை, டைடல் பார்க் சந்திப்பில் யூ-டர்ன் செய்து காமராஜர் சாலை, சிங்காநல்லூர் சாலை வழியாக செல்லலாம். கோவையில் இருந்து வெளியே செல்லும் இலகுரக வாகனங்கள் நேரத்திற்கு தகுந்தாற் போல் சித்ரா வழியாக அனுப்பப்படும்.

பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை அவினாசி சாலை மேம்பாலம் மூடப்படும். எனவே வாகன ஓட்டிகள் அதற்கு தகுந்தாற்போல் மாற்று பாதையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதுபோன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கனரக வாகனங்கள் மாநகருக்குள் வர தடை செய்யப்படுகிறது.

பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை விமான நிலையத்துக்குள் வாகனங்கள் மற்றும் கால்டாக்சிகள் செல்ல தடை செய்யப்படுகிறது. அன்று விமான நிலையம் செல்பவர்கள் 12 மணிக்கு முன்பாக செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 12 மணிக்கு மேல் வருபவர்கள் சித்ரா சந்திப்பில் இருந்து நடந்து செல்ல வேண்டும்.

நவம்பர் 18ம் தேதி காலை 6 மணி முதல் நவம்பர் 19ம் தேதி மாலை 6 மணி வரை விமான நிலைய முனையம் மற்றும் Y சந்திப்புக்கு முன்பாக வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படாது. மூன்று நிமிட காலத்திற்குள் பிக்அப் அல்லது டிராப் செய்வதற்கு எந்த தடையும் இருக்காது.

இடப்பற்றாக்குறை காரணமாக நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் பயணிக்கும் பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நவம்பர் 20ம் தேதி வரை, நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை, விமான நிலைய முனையம் மற்றும் Y சந்திப்புக்கு முன்னால் இரவு நேரங்களில் பார்க்கிங் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.