இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் “இந்திய முகங்கள்” என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு, உலகச் சாதனை நிகழ்வு நடைபெற்றது.

மாநாட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்கள், சுதந்திரத்திற்குப் பிந்தைய தலைவர்கள், அரசியல் சிந்தனையாளர்கள், இலக்கிய முன்னோடிகள், கலைஞர்கள், அறிவியலாளர்கள், பாதுகாப்புத் துறை வீரர்கள் ஆகியோரைப் பற்றிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், சிறப்புக் குறிப்புகள் வெளியிடப்பட்டன.

பல்கலைக்கழகப் பதிவாளர் சக்ரடீஸ் தலைமை உரையாற்றினார். மாநாட்டில் தொடர்பியல் துறை தலைவர் பாலசுப்பிரமணிய ராஜா, மகிழ்ச்சி பவுண்டேஷன்  இயக்குநர் புவனேஸ்வரி, மகிழ்ச்சி எஃப்.எம் ஒருங்கிணைப்பாளர் லயன். ஷைலஜா கணேசன், ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் வெங்கடேசன், துணைத் தலைவர் கலைவாணி, தோட்டக்கலைத் துறை முன்னாள் கண்காணிப்பாளர் அம்பேத்கர், பேராசிரியர் ஹரிஹரன், உதவி பேராசிரியர் கற்பகம், கோயம்புத்தூர் ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் சரவணகுமார், சாலேத் வென்சஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் 1500 கட்டுரைகள், 5400 பக்கங்களை கொண்ட இந்த நூல் படிப்பதற்கு வசதியாக 15 தொகுதிகளாக, மொத்தம் 15 நூல்கள்களாக தயாரிக்கப்பட்டு “இந்திய முகங்கள்” என்ற தலைப்பில் நூலாகவும், மின்னூலாகவும் வெளியிடப்பட்டது.

இந்திய முகங்கள் என்ற படைப்பை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் உலக சாதனை நிகழ்வாக அங்கீகரித்துள்ளது. மாநாட்டில் 500க்கும் மேற்பட்டோர் பல்கலை அரங்கத்தில் நேரடியாகக் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணையவழி மூலம் பங்கேற்றனர்.