-விளக்குகிறார் பி.எஸ்.ஜி. மருத்துவர் டாக்டர்.எல் வெங்கடகிருஷ்ணன்

உலகில் தோராயமாக 304 மில்லியன் மக்கள் நாள்பட்ட ‘ஹெபடைடிஸ் பி’ வைரஸ்  மற்றும் 50 மில்லியன் மக்கள் நாள்பட்ட ‘ஹெபடைடிஸ் சி’ வைரஸ் பாதிப்புடன் வாழ்வதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. தற்போதைய வாழ்வியல் சூழ்நிலை, உணவு பழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் புற்றுநோய் போன்ற நோய்கள் அதிகரிப்பது போல, ஆண்டுதோறும் பல லட்சம் பேர் ஹெபடைடிஸ் நோயாலும் பாதிக்கப்பட்டு இறப்பதாகக் கூறப்படுகிறது.

அது என்ன ஹெபடைடிஸ்? சென்ற வாரம் தான் குழந்தைகளுக்கு ‘ஹெபடைடிஸ்-பி’ தடுப்பூசி போட்டேன்? போன்ற கேள்விகள் எழுகிறதா? ஹெபடைடிஸ் என்பது கல்லீரல்  அழற்சியாகும். இது பொதுவாக வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகிறது. இந்த நோய் குறித்து மக்களிடையே  புரிதல்கள் மற்றும் விழிப்புணர்வு நிச்சயம் இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் தேதி  உலக ஹெபடைடிஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஹெபடைடிஸ் நோய் பல்வேறு வழிகளில் எவ்வாறு பரவுகிறது, அதன் தாக்கம், அதற்கான தீர்வு  குறித்து நம்மிடம் பேசுகிறார் பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை துறை தலைமை மருத்துவர்  டாக்டர்.எல் வெங்கடகிருஷ்ணன்:‘உறுப்புகளில் பெரியது கல்லீரல். -ஏ மற்றும் ஈ வைரஸானது  குறுகிய காலத்தில் உண்டாகும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல், மஞ்சள்காமாலை போன்ற பாதிப்புகள் விளைவாக வருகிறது. மேலும் அசுத்தமான உணவு மற்றும் நீரால் பெரும்பாலும் பரவுகிறது. ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ் பாதிக்கப்பட்ட ரத்தத்தில் இருந்து,  முறையற்ற பாதுகாப்பற்ற  பாலியல் தொடர்புகள், பச்சை மற்றும் காது குத்தும்போது ஒரே ஊசியை பயன்படுத்துவது போன்றவற்றால் பரவுகிறது.

ஹெபடைடிஸ் தொற்று கடுமையாக இருப்பவர்களுக்கும் நாள்பட்ட தொற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும் அறிகுறிகளில் வேறுபாடுகள் இருக்கின்றன. கர்ப்ப காலத்தில் தாய் ஹெபடைடிஸ்-பி.யால் பாதிக்கப்பட்டிருந்தால் தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவ வாய்ப்பு உண்டு.  இந்த ஹெபடைடிஸ் ஏ, பி மற்றும் சி கடுமையான பாதிப்பு விளைவுகளை அதாவது, கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் புற்றுநோய் உள்ளிட்ட பிரச்னைகளை உண்டுபண்ணும்.

ஹெபடைடிஸின் தீவிர பாதிப்பின் போது உடல் வலி, அதிகப்படியான சோர்வு, காய்ச்சல், பசியின்மை, களைப்பு, குமட்டல் மற்றும் வாந்தி, வயிறு வலி, சிறுநீர் மற்றும் மலத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்படுவது, கண்களில் மஞ்சள் நிறம் உண்டாவது போன்று சில அறிகுறிகள் தென்படும். சில சமயங்களில் உட்கொள்ளும் மருந்துகளாலும் ஹெபடைடிஸ் பாதிப்பு ஏற்படலாம். பொதுவாக, இதன் அறிகுறிகள் சாதாரணமாகத் தோன்றுவதால் பலரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. வேறொரு பாதிப்புக்காக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதிக்கும் போதுதான் ஹெபடைடிஸ் பாதிப்பு இருப்பது பலருக்கும் தெரிய வருகிறது. ஹெபடைடிஸ்-ஏ மற்றும் பி நோய்க்குத்  தடுப்பூசிகள் உள்ளன. நல்ல சுகாதாரமான பாதுகாப்பான உணவை எடுத்துக்கொண்டால் ஹெபடைடிஸ்-ஏ மற்றும் ஈ  ஆகியவை வராமல் தடுக்கலாம். சாதாரண அறிகுறிகளையும் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பதால் இதனை தடுக்கலாம்’ என்று கூறினார்.